search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் பாதுகாப்பு"

    நாம் பயணம் செய்யும் கார்களுக்கு மேற்கொள்ளப்படும் கிராஷ் டெஸ்ட் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #CrashTest



    நாம் வெளியூர்களுக்கு பயனிக்கும் நேரத்தை சவுகரியமாக்கியதில் கார்களின் பங்கு மிக அதிகம். கார்கள் பாதுகாப்பு கொண்டவைதான் என்பதை யாராவது சான்று அளித்தால்தான் நம்பிக்கை வரும். அதற்குத்தான் ‘கிராஷ் டெஸ்ட்’ எனப்படும் மோதல் சோதனை நடத்தப்படுகிறது. 

    கார்கள் விபத்தை சந்திக்க நேர்ந்தால் அதில் பயனம் செய்வோர் எந்த அளவுக்கு பாதுகாப்பாக உள்ளனர் என்பதை இந்த கிராஷ் டெஸ்ட் உறுதி செய்கின்றன. சோதனைகளின் முடிவில் இவற்றுக்கு நட்சத்திர குறியீடு அளிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் கார்களைத் தேர்வு செய்யலாம். இதுபோன்ற கிராஷ் டெஸ்ட்களை நடத்துவதற்கு சர்வதேச அளவில் பிரபலமான நிறுவனங்கள் உள்ளன. 

    கார்களில் பயணிகளுக்குப் பதிலாக மனித உருவிலான பொம்மைகள் (டம்மி) பயன்படுத்தப்படும். மனித உருவில் மட்டுமின்றி மனிதனின் சதைப் பகுதி, எலும்பு, உடலின் பிற பாகங்கள், தலைப் பகுதி என அனைத்தும் அசல் மனித உறுப்புகளைப் போலவே இருக்கும். இதனால் வாகன சோதனையின்போது இந்த பொம்மைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை அளவிட்டு அதன் அடிப்படையில் வாகனத்தின் பத்திரத்தன்மை உறுதி செய்யப்படும்.

    சோதனை நடத்துவதற்காக கார்கள் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் இயக்கப்படும். பெரும்பாலும் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் கார்கள் இயக்கப்பட்டு மோதல் சோதனைக்கு உள்ளாக்கப்படும். பொதுவாக முன்பக்கத்தில் சோதனை நடத்தப்படும். மிகவும் உறுதியான கான்கிரீட் சுவர்மீது நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் கார் வந்து மோதினால் அது எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறது என்பது சோதிக்கப்படும். 



    இத்தகைய மோதலின் போது காரினுள் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் சோதிக்கப்படும். வழக்கமான கார்களுக்கு ஒரு விதமாகவும், எஸ்.யு.வி. கார்களுக்கு ஒரு விதமாகவும் இந்த சோதனை நடத்தப்படும். அதாவது கார்களின் உயரத்துக்கேற்ப முன்புற மோதல் நிகழ்வு பொருள் மாறுபடும்.

    பக்கவாட்டில் மோதல் ஏற்பட்டால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும். அது எந்த அளவுக்கு வாகனம் தாக்குப்பிடிக்கிறது என்பதை சோதிக்க ஓவர்லாப் சோதனை நடத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்து கார் உருண்டு விபத்தை சந்திக்க நேர்ந்தால் எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பதும் சோதிக்கப்படுகிறது. காரின் கதவுகள், மேல் பகுதியை இணைக்கும் தூண்கள் எந்த அளவுக்கு ஸ்திரமாக உள்ளன என்பது இதில் தெரியவரும்.

    வழக்கமான சாலைகளில் காணப்படும் பொருள்கள் நிறைந்த பகுதியில் மோதல் நிகழ்ந்தால் எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பதும் சோதிக்கப்படும். விபத்து ஏற்படும்போது தலையில் எந்த அளவுக்கு காயம் ஏற்படுகிறது என்பது கவனத்தில் கொள்ளப்படும். அடுத்து மார்பு பகுதியில் எந்த அளவுக்கு விபத்தின் பாதிப்பு இருக்கிறது என்பது சோதிக்கப்படும். கால் மற்றும் தொடைப் பகுதியில் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் ஆராயப்படும்.

    ஃபோக்ஸ்வேகன் போலோ, டொயோட்டா எடியோஸ், டாடா ஜெஸ்ட் ஆகிய கார்களே இத்தகைய சோதனையில் நட்சத்திரக் குறியீட்டைப்பெற்றிருக்கின்றன. இனிவரும் காலங்களில் பாதுகாப்பான வாகனம் என்பதற்கான சான்று பெற்றால் மட்டுமே அவற்றை சாலைகளில் இயக்க அனுமதிக்கப்படும் என்ற விதிமுறைகள் படிப்படியாக கட்டாயமாக்கப்படலாம். கிராஷ் டெஸ்ட் சோதனையில் வெற்றி பெற்ற கார்களில் பயணம் செய்வது பாதுகாப்பானது என்ற நிலை உருவாகிவிடும்.
    ×